பார்த்தீபனின் ஆணை!

No Title

Published on 26/09/2023
பார்த்தீபனின் ஆணை!

எனக்குப் பசியெடுக்கிறது.

அதற்காக என் நினைவு நாளில் 
கொத்துரொட்டியும், கோழி பிரியாணியும் 
மட்டும் பரிமாறாதீர்!

நான் தாகத்தால் துடிக்கிறேன்.

அதற்காக என் நினைவு நாளில் 
கோப்பியும், தேனீரும் 
மட்டும் பரிமாறாதீர்!

நான் வாடிக் கிடக்கிறேன்.

அதற்காக என் நினைவுகளைப்
பூக்களால் 
மட்டும் அர்ச்சிக்காதீர்!

நான் அணைந்து போய் கிடக்கிறேன்.

அதற்காக என் நினைவுகளைத்
தீபம் ஏற்றி 
மட்டும் ஆராதிக்காதீர்!

கொடியும், கொற்றமும் 
இழந்து கிடக்கிறேன்.

அதற்காக என் நினைவுகளைக்
கொடி ஏற்றி மட்டும் இரைமீட்டாதீர்!

நான் பேசி ஆண்டுகள்
முப்பத்தாறு ஆகி விட்டன.

ஆனாலும் என் நினைவேந்தி
ஒரு வார்த்தை 
மட்டும் பேசிவிடாதீர்!

என் முன்னே சென்றவர்களும்,
என் பின்னே வந்தவர்களுமாக
ஆயிரமாயிரம் பேர்
'ஒரு நாளாவது 
தாய்மண் விடியாதா?'
என்ற ஏக்கத்தோடு
இல்லாமை எனும் உலகில்
அலைந்துழல்கிறோம்.

ஆனாலும் என்ன?

நல்லூர் முருகன் கோவில் முன்றலில்,
பன்னிரு நாட்கள் 
நான் பசி கிடந்த பொழுது,
படையெடுத்து வந்த உங்களில் பலர்
நாடோடிப் போய்
ஆண்டுகள் பல ஆகி விட்டன.

பரிபூரணமாகக் கிளர்ந்தெழுமாறு
அன்று நான் கேட்ட பொழுது
என்னருகில் அமர்ந்திருந்த தோழரும்,
எனக்குப் பின் விடமணிந்த தோழியரும்,
பல்லாயிரமாய் பணிமுடித்த
திருப்தியில் இப்போ
ஓய்ந்து விட்டார்.

அன்று என்னோடு
அருகில் அமர்ந்திருந்த
பெருமைகளைப் பேசுவதும்,
முகநூலில் கவிபாடுவதுமே
தம் கடமை என்றெண்ணி
ஓய்ந்து கிடக்கின்றார்.

எஞ்சியோர்
விடுதலை வேள்விக்கு
சாந்தி செய்து விட்டார்.

அவர்களின் முன்
புகலிடம் ஏகிப் 
விடுதலைப் பணிசெய்தோரும்,
விடுதலை வேள்விக்குத் 
துணை நின்றோரும்,
இராசதந்திரப் 
போர் புரிவதாகக்
கதையளந்து,
மூப்பும், பிணியுமாய்,
மரணம் தலைவாசல் 
வரும் நாள் வரை
காலச் சக்கரத்தைக்
கச்சிதமாய் நகர்த்துகின்றார்.

என் அன்புத் தோழர்களே, தோழியரே!

உங்களை மீட்க அண்ணன் வந்தான்.
அண்ணன் வழியில் 
நாங்கள் முன்னே சென்றோம்.
எங்களோடு
நடந்த பெருமைகளும்,
தோள்கொடுத்த நினைவுகளும்
மட்டுமே ஓடி ஓய்ந்திருக்கும் 
உங்கள் எல்லோருக்கும் சொந்தம்.

அகதி அந்தஸ்துக்கும்,
அந்நிய நாட்டுக் குடியுரிமைக்கும்
அது தான் உங்களின் முதலீடு.

டில்லியில் இருந்து 
மீட்பர் வருவார்,
காணியதிகாரமும்,
காவல்துறை அதிகாரமும் தருவார்,
நாடுகடந்து நியூயோர்க்கில்
அரசமைத்து அமைச்சர்களாகலாம்,
ஒக்ஸ்போர்ட்டில் காணிபிடித்து 
கற்பனையில் களமாடலாம்,
ஹேக்கில் இருந்து 
பிடியாணை பிறப்பிக்கலாம்,
ஆண்டுக்கு இரு தடவை
வானவூர்திகளிலும், மகிழுந்துகளிலும்,
தொடருந்துகளிலும் 
ஜெனீவாவிற்குப் படையெடுத்துப் போய்
பகையைப் புறமுதுகிட்டோட வைக்கலாம்,
இந்து மாகடலில்
பாரதமும், சீனமும் பொருதும் நாளில்
தமிழ் ஈழத்தை
இந்தியாவின் அரணாக்கித்
தனிநாட்டை மலர வைக்கலாம்,
எனப் பல கனவுக் கதைகளைப்
பேசிக் காலத்தை
நீங்கள் கடத்துகையில்
இனியெதற்கு நான்?

இனியெதற்கு என் நினைவு?

என்னை மறந்து விடுங்கள்!

என்னோடு எங்கள் எல்லோரையும் 
கூண்டோடு மறந்து விடுங்கள்!

இருப்பை இழந்து,
இல்லாமை எனும் உலகில்
நாங்கள் விடுதலைப் பசி கிடக்கிறோம்.
தணியாத சுதந்திர தாகத்தால் துடிக்கிறோம்.
திருவுடல் வாடி விழுந்தும்,
விடுதலைத் தீ அணைந்தும், 
கொடியும், கொற்றமும் இழந்தும்,
வார்த்தைகள் தொலைத்த மௌனிகளாகி
'தாய்மண் விடியாதா?' என 
அலைந்துழல்கிறோம்.

எங்கள் கனவுகளை நிறைவேற்றக் 
கருமம் ஆற்றாத உங்களுக்கு 
எங்கள் நினைவுகள் மட்டும் 
இனி எதற்கு?

வானொலிகளிலும்,
தொலைக்காட்சிகளிலும்
வெற்று வார்த்தைகள் பேசி,
முகநூலில் 
எதுகை மோனையில் கவிதை பாடி,
மேடைகளில் வீர முழக்கமிட்டு,
என்றுமே நிறைவேற்றாத உறுதிமொழிகளை
நீங்கள் எடுப்பதை விட
எங்கள் எல்லோரையும் மறந்து 
நேற்றும், இன்றும் போல் 
நாளையும் 
வாழ்வின் வசந்தங்களை 
நீங்கள் சுகியுங்கள்.

என் அண்ணனின் 
புதல்வி இருக்கிறாள்.

அவள் பின்னே 
ஒரு நாள் என் மக்கள்
பரிபூரணமாகக் கிளர்ந்தெழுவார்கள்.

இருப்பை இழந்து
இல்லாமை எனும் உலகில்
விடுதலைப் பசியோடும்,
சுதந்திர தாகத்தோடும்
அலைந்துழலும்
எங்கள் எல்லோரின்
கனவுகளையும் 
அவள் நனவாக்குவாள்.

நீங்கள் எல்லோரும் 
மட்டும் ஓய்வெடுத்து,
வாழ்வின் வசந்தங்களை
தொடர்ந்து சுகியுங்கள்.