பெரும் படை பலத்தைப் பிரயோகித்துத் துணிகர மீட்பு நடவடிக்கை மூலம் ஈரானில் இருந்து உப வானோடியை மீட்டெடுத்த அமெரிக்கா!
Hollywood திரைப்படங்களில் இடம்பெறுவது போன்று பெரும் படை பலத்தைப் பிரயோகித்து ஈரானில் சிக்கிக் கொண்ட தமது உப வானோடியைத் துணிகர நடவடிக்கை மூலம் அமெரிக்கா மீட்டெடுத்துள்ளது.
ஈரானில் குண்டுவீச்சில் ஈடுபட்ட அமெரிக்க வான்படையின் F-15E விமானம் ஒன்று இவ்வாரம் ஈரானிய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
குறித்த விமானத்தை செலுத்திய வானோடியும், அவருக்கு உதவியாகப் பயணித்த உப வானோடியும் வான்குடை (parachute) மூலம் குதித்து உயிர் தப்பினர்.
இதில் விமானத்தை செலுத்திய வானோடி உடனடியாகவே மீட்கப்பட்டார்.
ஆனால் உப வானோடியின் இருப்பிடம் அறியப்படாத நிலையில் அவரை சிறைப்பிடிக்க உதவுவோருக்கு பெரும் தொகையில் சன்மானம் அளிக்கப்படும் என்று ஈரான் அறிவித்தது.
இந்நிலையில் உப வானோடியின் இருப்பிடத்தைக் கண்டறிந்து கொண்ட CIA, திசைதிருப்பும் உளவியல் நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியது.
மறுமுனையில் உப வானோடி மறைந்திருந்த பகுதிக்கு நூற்றுக்கணக்கான படையினரையும் பன்னிரண்டிற்கும் அதிகமான உலங்குவானூர்திகள் மற்றும் குண்டு வீச்சு விமானங்களை அமெரிக்கா களமிறக்கியது.
இதன்போது உப வானோடியின் மறைவிடத்தை நெருங்கிய ஈரானிய துருப்புக்கள் மீது அமெரிக்க குண்டு வீச்சு விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
எனினும் உப வானோடியின் இருப்பிடத்தை நெருங்கிய இரண்டு அமெரிக்க போக்குவரத்து வானூர்திகள், ஈரானிய படைகளின் தாக்குதல்களில் சேதமடைந்து மேலெழ முடியாத நிலை ஏற்பட, அவ்விரண்டு வானூர்திகளையும் தகர்த்து விட்டு உப வானோடியைப் பத்திரமாக மீட்டெடுத்து அமெரிக்கப் படையினர் தளம் திரும்பியுள்ளனர்.
இந்தத் துணிகர நடவடிக்கையில் மீட்கப்பட்ட அமெரிக்க உப வானோடியிடம் வெறும் கைத்துப்பாக்கி ஒன்று மட்டுமே இருந்துள்ளது.
Saving Private Ryan, Lone Survivor ஆகிய Hollywood படங்களில் இடம்பெற்றது போன்று அமெரிக்கா மேற்கொண்ட இந் நடவடிக்கை தமது ஒவ்வொரு படை வீரர்களின் உயிர்களையும் காப்பதற்கு எந்த விலையையும் கொடுப்பதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதையே உணர்த்தி நிற்கின்றது.
-சேரமான்
படங்கள்: Lone Survivor