-->
No Title
துவாரகா உயிரோடு இருப்பது உறுதியாகி விட்டது.
இப்போது எழக்கூடிய பல கேள்விகளில் இரண்டு கேள்விகளை முக்கியமானவையாகக் கருதலாம். முதலாவது: துவாரகாவின் வருகை எப்போது நிகழும்? இரண்டாவது: துவாரகாவின் வருகை தமிழ்த் தேசிய அரசியலில் எவ்விதமான தாக்கங்களை ஏற்படுத்தும்? இவ்விரு கேள்விகளுக்கும் பதிலளிக்க விளைவதே இப் பத்தியின் நோக்கமாகும்.
துவாரகா உயிரோடு இருக்கிறார் என்பதை முன்னாள் இயக்க உறுப்பினர் ஒருவரிடம் நான் தெரிவித்த போது அவர் கூறினார்: ‘அப்பாடா. அண்ணையின்ரை ஒரு வாரிசாவது உயிரோடை இருக்குதே. துவாரகா வெளியில் வராவிட்டாலும் பரவாயில்லை. ஆள் பத்திரமாக இருந்தாலே போதும். அந்த ஒரு செய்தியே எனக்குப் போதும்.’
உண்மையில் துவாரகா எப்போது வெளியில் வருவார் என்பதை தீர்மானிக்கப் போவது அவரது பாதுகாப்புத் தான். உயிர் தப்பவே முடியாது என்று கருதப்பட்ட முள்ளிவாய்க்காலில் இருந்து உயிர் தப்பிக் கடந்த பதினான்கு ஆண்டுகளாக உலகின் எங்கோ ஒரு மூலையில் பத்திரமாக இருக்கும் துவாரகாவிற்கு எந்தப் பங்கமும் வந்து விடக் கூடாது என்பது தான் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பலரது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
முதலாவதாக துவாரகாவின் அரசியல் பிரவேசத்திற்கு அவர் தங்கியிருக்கும் நாடு இடையூறாக இருக்கக் கூடாது. அப்படி அந்த நாடு இடையூறாக இருக்காத பட்சத்தில், துவாரகா வெளிப்படும் போது அவரைக் கைது செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கமோ அல்லது வேறு ஏதாவது நாசகார சக்திகளோ எடுக்கும் முயற்சிகளுக்கும், பிரயோகிக்கக் கூடிய அழுத்தங்களுக்கும் குறித்த நாடு அடிபணியாத புறநிலை இருக்க வேண்டும். இப்படியான ஒரு சூழலில் தான் துவாரகா வெளிப்படுவது பொருத்தமாகும்.
அடுத்தது துவாரகாவின் வருகையால் ஏற்படக் கூடிய தாக்கங்கள்.
மீண்டும் ஒரு யுத்தத்தை எதிர்கொள்ளும் மனநிலையில் தமிழீழ மக்கள் இல்லை. கடந்த பதினான்கு ஆண்டுகளில் தமது வாழ்வைக் கட்டியெழுப்பி வரும் தமிழீழ மக்கள் மீண்டும் தாயக பூமியில் குருதியாறு ஓடுவதையோ, அதற்காக உயிர்த்தியாகம் செய்யப்படுவதையோ விரும்பவில்லை.
யுத்த மேகங்கள் தமிழீழ தாயக பூமியில் மீண்டும் சூழ்வதை துவாரகாவும் விரும்பவில்லை என்பது தான் எனது புரிதலும்.
எனவே துவாரகாவின் வருகை என்பது முற்று முழுதாக அமைதிவழியில் நிகழக் கூடிய ஒரு அரசியல் வருகையாவே இருக்க முடியும். அப்படியான ஒரு அரசியல் பிரவேசத்தையே தமிழீழ தேசம் எதிர்பார்க்கின்றது.
சரி, இன்றைய உலகச் சூழமைவில், சிங்களப் படையாட்சிக்கு உட்பட்டிருக்கும் தமிழீழ தாயகத்தில் இருக்கக் கூடிய நெருக்கடிகளுக்கு மத்தியில் எப்படியான அரசியல் பிரவேசத்தை துவாரகா மேற்கொள்ள முடியும்?
ஒரு பேச்சுக்கு துவாரகா தாயகம் திரும்பி அங்கு ஒரு அரசியல் அசைவியக்கம் (political movement) ஒன்றைக் கட்டியெழுப்ப முற்படுவாராயின் உடனடியாகவே கொழும்பில் வைத்துக் கைது செய்யப்படுவார். அவர் மீது பயங்கரவாதத் தடைச்சட்டமும், அவசரகால நடைமுறையும் ஏவப்படும்.
அப்படியொரு நெருக்கடியைக் கொடுக்கும் எண்ணம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு இல்லை என்று வைத்துக் கொள்வோம். முன்னாள் இயக்க உறுப்பினர்களை அரசியல் நீரோட்டத்தில் இணைய அனுமதித்தது போன்று துவாரகாவையும் அரசியல் நீரோட்டத்தில் இணைய விடும் பெருந்தன்மை சிறீலங்காவின் ஆட்சியாளர்களுக்கு உண்டு என்றும் வைத்துக் கொள்வோம்.
அவ்வாறான சூழலில் கூடத் தமிழீழ தேசத்தின் அரசியல் அபிலாசைகளை முற்றுமுழுதாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய அசைவியக்கத்தை துவாரகா கட்டியெழுப்புவதற்கு சிறீலங்காவின் அரசியலமைப்பு இடமளிக்காது.
தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கையை அரசியல் ரீதியில் முன்வைப்பதை சிறீலங்காவின் அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டம் குற்றச்செயலாக விதிக்கின்றது. இன்னொரு விதத்தில் சொல்வதானால் தனிநாட்டுக் கோரிக்கையை முன்னிறுத்திய அல்லது முன்னிறுத்தும் ஒருவரை நெடுங்காலக் கடூழியச் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தும் அதிகாரத்தை சிறீலங்காவின் நீதித்துறைக்கு ஆறாம் திருத்தச் சட்டம் வழங்குகின்றது. 1985ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தைகள் முடங்கிப் போனதற்கும், 1990ஆம் ஆண்டு பிரேமதாசாவுடனான பேச்சுக்கள் முறிந்து போனதற்கும் அடிப்படையாக இருந்தது ஆறாம் திருத்தச் சட்டம் தான்.
எனவே ஈழத்தீவிற்கு துவாரகா திரும்பிச் சென்று ஒரு அரசியல் அசைவியக்கத்தைத் தொடங்குவது என்பது சாத்தியமற்றது. மண்டேலா, ஒச்சலானோ ஆகியோரின் நிலை துவாரகாவிற்கு ஏற்படுவதை எந்தவொரு தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் விரும்பப் போவதில்லை.
அடுத்தது வெளிநாடுகளில் இருந்தவாறு துவாரகா முன்னெடுக்கக் கூடிய அரசியல் செயற்பாடுகள்.
உண்மையில் வெளிநாடுகளில் ஆங்கிலத்தில் லொபியிங்க் (lobbying) என்று சொல்லப்படும் பரப்புரை செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுக்க முடியும். அதாவது கவனயீர்ப்புப் பேரணிகள், கருத்தரங்குகள், மாநாடுகள், வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், இராசதந்திரிகளுடனான கலந்துரையாடல்கள் போன்றவற்றையே வெளிநாடுகளில் இருந்து மேற்கொள்ள முடியும். இது தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான அனைத்துலக ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவதற்கும், இனவழிப்பிற்கான நீதியைப் பெறுவதற்கான காலத்தை வேகப்படுத்துவதற்கும் உதவுமே தவிர, இதனால் உடனடியாகத் தமிழீழத் தாயகத்தில் காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்தி விட முடியாது.
தவிர இவ்வாறான முன்னெடுப்புக்கள் ஏலவே கடந்த பதினான்கு ஆண்டுகளாகப் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவற்றை துவாரகாவின் வருகை ஒருவேளை வினைத்திறன் மிக்க பரப்புரைச் செயற்பாடுகளாக மாற்றியமைக்கலாம். இன்றைய சூழமைவில் இதற்கு அப்பால் பெரிதாக எதையும் சாதித்து விட இயலாது.
அனைத்துலக பரப்புரை செயற்பாடுகளுக்கு அப்பால் தமிழீழ தாயகத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பொருண்மிய மற்றும் மனிதநேய முன்னெடுப்புகளை துவாரகாவின் பின்னால் அணிதிரளக் கூடிய செயற்பாட்டாளர்களால் மேற்கொள்ள முடியும். ஆயினும் துவாரகாவின் முத்திரை குத்தப்பட்ட அமைப்புக்கள் தமிழீழ தாயகத்தில் இவ்வாறான பொருண்மிய மற்றும் மனிதநேய முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் இடமளிக்குமா என்பது கேள்விக் குறிதான்.
அப்படியாயின் துவாரகாவின் வருகையால் தமிழீழ தேசத்திற்கு ஏற்படக் கூடிய நன்மைகள் தான் என்ன?
முதலாவதாக தமிழீழத் தேசியத்தின் அடையாளமாகத் திகழ்பவர் தேசியத் தலைவர் அவர்கள். அவரது வாரிசு என்ற வகையில் தேசியத் தலைவரின் அரசியல் சிந்தனைகளின் வழிகாட்டியாக துவாரகாவைப் பெரும்பான்மையாக தமிழீழ மக்கள் கருதுவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு.
தவிர தமிழீழத் தேசியத்தின் அடுத்த அடையாளமாக துவாரகா உருவகம் பெறுவது என்பது பிளவுபட்டு, முரண்பட்டு நிற்கும் புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் ஒரே அரசியல் செல்நெறிக்கு உட்பட்டுப் பயணிக்க வைப்பதற்கு வழிகோல நிறைய வாய்ப்புண்டு.
எனவே துவாரகாவின் வருகை எதிர்பார்க்கப்பட்டபடி நிகழுமாயினும், தன்னாட்சி உரிமைக்கான தமிழீழ தேசத்தின் அரசியல் முன்னெடுப்புகளுக்கு அது பெரும் உந்து சக்தியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியாது.
துவாரகாவின் வருகையைப் புலம்பெயர் தேசங்களில் தறிகெட்டுப் பயணிக்கும் ஒரு சில தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களும், தமிழீழ தாயகத்தில் இயங்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் பெரிதாக விரும்பவில்லை என்பதைக் கிரகித்துக் கொள்ள முடிகின்றது.
ஆனாலும் துவாரகாவின் வருகையை மக்கள் விரும்பினால், அதன் பின்னர் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதைத் தவிர குறித்த புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புகளுக்கும், தமிழீழ தாயகத்தில் இயங்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் வேறு தெரிவுகள் இருக்காது.
இவையெல்லாவற்றையும் விட தமிழீழம் என்றொரு தனிநாடு தென்னாசியாவில் உருவாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக அமையுமாயின் அதற்கு தமிழீழ தேசத்தின் அடுத்த அடையாளமாக துவாரகா உருவகம் பெறவேண்டியது இன்றியமையாதது ஆகும்.
இவை எல்லாம் ஈற்றில் தான் வெளிப்பட்ட பின்னர் துவாரகா என்ன செய்யப் போகின்றார் என்பதிலேயே தங்கியுள்ளன.
அவற்றை எல்லாம் கண்கூடே நாம் காண்பதற்கு தேசத்தின் புதல்வியின் வருகை முதலில் நிகழ்ந்தாக வேண்டும்.
அதற்கு இடையூறாகத் தாம் அமைந்து விடக் கூடாது என்ற பிரக்ஞையோடு தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் நடந்து கொண்டால் சரி.