-->
No Title
வணக்கம் பிள்ளையள்.
இப்ப உங்களுக்கு எல்லாம் எங்க நேரம் இருக்கப் போகுது? அனல்பறக்க முகநூலிலையும், வட்ஸ்அப், வைபர் குறூப்புகளிலையும் அரசியல் பேசிக் கொண்டு விசைப்பலகையில் ஐந்தாம் கட்ட ஈழப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிற உங்களுக்கு என்னை மாதிரிக் கிழவன் சொல்கிற கதையளைக் கேட்கிறதுக்கு எங்கை தான் நேரம் கிடைக்கப் போகுது?
அதுவும் இப்ப கன பேர் சூமிலை தான் அரசியல் போராட்டம் நடத்துகீனமாம். எங்கை பார்த்தாலும் சூமிலை வணக்க நிகழ்வு, கவனயீர்ப்புப் போராட்டம், எதிர்ப்புப் போராட்டம் அது இது என்று எல்லோருமே நேரம் இல்லாமல் அடிச்சுப் பிடிச்சுக் கொண்டு திரியீனம்.
தந்தை செல்வாவின்ரை காலத்திலை போராட்டம் என்றால் வீதிகளில் இறங்கிக் குந்து மறியல் செய்கிறது, உண்ணாவிரதம் இருக்கிறது, ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுக்கிறது, சிறை நிரப்புகிறது என்று இருந்தது. எங்கடை தம்பி பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கின பிறகு போராட்டம் என்றால் தியாகம் என்பதாக மாறிச்சுது.
வெறும் உயிர்கொடையை மட்டும் தியாகம் என்று நான் சொல்லவில்லை பிள்ளையள். தங்கடை இளமைக் கால சுகபோகங்களைத் துறந்து, தாய், தகப்பன், சகோதரங்கள், சொந்த பந்தங்கள் எல்லாத்தையும் பிரிஞ்சு, காடு மேடெல்லாம் அலைஞ்சு, குட்டையில் கிடக்கிற நீரைக் குடிச்சும், காட்டு விலங்கையும், கனிகளையும் உண்டும், தங்கடை உயிரைத் துச்சமாக மதிச்சு, உறங்காத கண்மணிகளாக எல்லையிலை காப்பரணில் இருந்து போராடுறதையும் தான் தியாகம் என்று நான் குறிப்பிடுகிறேன் குஞ்சுகள்.
முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு அதெல்லாம் மாறி ஹொட்டேலிலையும், மண்டபங்களிலையும் கூட்டங்களை நடத்தித் தமிழீழத்தின்ரை அரசவை கூடியிருக்குது, தமிழீழப் பாராளுமன்றம் கூடியிருக்குது என்று பேய்க்காட்டுகிறது, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் எண்டு சொல்லி விசா எடுக்கிறதுக்காக போட்டோவுக்கு போஸ் குடுக்கிறது, கடைக்காரரிட்டை காசு வாங்கிக் கொண்டு குடும்பத்தை எல்லாம் விட்டுப் போட்டுப் போராடுகிறதாகச் சொல்லி நாலு படங்களையும், துண்டுப் பிரசுரங்களையும் கைகளில் வைச்சுக் கொண்டு சூரியக் குளியல் எடுக்கிறது, வருசத்துக்கு இரண்டு தடவை ஜெனீவாவுக்கு விமானத்தில் காவடி எடுத்து விடுமுறையில் போகிறது, குருதிக் கொழுப்பு குறையிறதுக்காக சைக்கிள் ஓடுகிறது, தண்ணீர் குடிச்சுக் கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது எண்டு போராட்டம் என்பதற்கே அர்த்தம் இல்லாம் போய் விட்டுது பாருங்கோ.
போதாக்குறைக்கு உதுக்குப் பெயர் இராஜதந்திரப் போராட்டமாம்.
இப்ப என்னடா என்றால், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக எங்கடை ஆட்கள் சூமிலை களமாடுகீனமாம். எதுக்கும் ஒரு அளவு இருக்க வேணும் பிள்ளையள். இதுக்குள்ளை இன்னும் கொஞ்சப் பேர் காசும் சேர்க்கீனமாம். என்னத்துக்கு என்று கேட்டால் சூமிலை போராட்டம் நடத்துகிறதுக்கான செலவுகளை ஈடு செய்யிறதுக்கு என்று சொல்லுகீனம்.
எனக்கு வருகிற ஆத்திரத்துக்குப் பிள்ளையள்...
காட்டுக்குள் எறிக்கிற நிலவும், கானலுக்குப் பெய்கிற மழையும் ஒருத்தருக்கும் உதவாது என்று அந்த நாட்களில் என்ரை ஆச்சி சொல்கிறவா. இப்பத் தான் அதின்ரை அர்த்தம் எனக்கு விளங்குது.
உதுகள் எல்லாம் செய்கிறதில் எந்தத் தப்பும் இல்லை பிள்ளையள். தங்கடை விடுதலை உணர்வை வெளிப்படுத்த விரும்புகிறவையள், தாங்கள் விரும்பிய வழிகளில் அதை வெளிப்படுத்துகிறதில் தப்பில்லை.
கவிதை எழுதுங்கோ, கதை எழுதுங்கோ, கட்டுரை எழுதுங்கோ, படம் எடுங்கோ: ஒரு பிரச்சினையும் இல்லை. உங்களுக்குக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் நம்பிக்கை இருக்குது என்றால் அதைச் செய்யுங்கோ. ஹொட்டேலில் கூட்டம் கூடுகிறதில் நம்பிக்கை இருக்குது என்றால் அதையும் செய்யுங்கோ. அதைப் போலை நீங்கள் உண்ணாவிரதம் இருக்கிறதிலையோ, சைக்கிள் ஓடுகிறதிலையோ எந்தத் தப்பும் இல்லை. ஏன் நீங்கள் சூமில் கூடி வணக்க நிகழ்வு நடத்துகிறதும் சரி, கலந்துரையாடுகிறதும் சரி தப்பில்லை. ஆனால் உதை எல்லாம் போராட்டம் என்று சொல்லி கொச்சைப்படுத்தாதேயுங்கோ. விளங்குதே?
போராட்டம் நடத்துகிறதாக இருந்தால் ஒன்றில் 1961ஆம் ஆண்டிலை தந்தை செல்வா நடத்தின தமிழரசுக்கான அறவழி ஒத்துழையாமை இயக்கத்தை நீங்கள் நடத்த வேணும். இல்லாவிட்டால் தம்பியின்ரை வழியிலை உங்களையும், உங்கடை சுகபோகங்களையும் துறந்து களத்திலை குதிக்க வேணும். அதை விட்டுப் போட்டுப் இலண்டனிலையும், பாரிசிலையும், ஒஸ்லோவிலையும், ரொறொன்ரோவிலையும், நியூயோர்க்கிலையும் உங்கடை வீடுகளில் ஒய்யாரமாகக் குந்தியிருந்து தண்ணி அடிச்சு, இறைச்சியைப் பொரிச்சு தின்று கொண்டு சூமிலை கதைக்கிறதை எல்லாம் போராட்டம் என்று சொல்லக் கூடாது பாருங்கோ.
இப்பிடித் தான் பத்து நாளைக்கு முதல் சூமிலை கொஞ்சப் பேர் கூடிக் கதைச்சவையளாம். சிறீலங்கா நாடாளுமன்றத் தேர்தலையும், அதுக்குப் பின்னரான அரசியலையும் எப்பிடிக் கையாள்கிறது என்று ஆராய்கிறது தான் இவர்களின்ரை நோக்கமாம். இதிலை என்ன பகிடி என்றால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவையளில் கன பேர் கூரை ஏறி கோழி கூட பிடிக்கத் தெரியாத ஆட்கள். ஆனால் தாங்கள் தான் தமிழ் மக்களின்ரை அறிவுஜீவிகள் என்கிற மிதப்பிலை, தாங்கள் சொல்கிறதை தான் எல்லாத் தமிழ் அரசியல் கட்சிகளும் கேட்க வேண்டும் என்கிற தொனியிலை தான் இவையள் எல்லோருமே கதைச்சவையள். சும்மா ஐந்து, பத்து நிமிசத்துக்கு எல்லாம் இவையள் கதைக்கவில்லை பிள்ளையள். மொத்தம் இரண்டரை மணித்தியாலம் சூமிலை இவையள் போராடியிருக்கீனம்.
ஒரு பக்கத்திலை நியூயோர்க்கிலை உள்ள தன்ரை அலுவலகத்திலை, தன்ரை மேசைக்குப் பின்னாலை புத்தகங்களையும், கோவைகளையும் அடுக்கி வைச்சுப் போட்டு, நாய்க்கு பட்டி கட்டின மாதிரி கழுத்திலை ரையும் கட்டிக் கொண்டு, பக்கத்திலை புலிக்கொடி, தலைக்கு மேலை நடராஜர் சிலை என்று வைச்சுக் கொண்டு கனவுலகத் தமிழீழ சாம்ராச்சியத்தின்ரை சக்கரவர்த்தி உருத்திரகுமாரன் போராடியிருக்கிறார்.
மறுமுனையிலை கனவுலகத் தமிழீழத்தின்ரை பின் இயந்திரம் என்று சொல்லிக் கொண்டு திரிகிற தர்மலிங்கம் சர்வேந்திரா என்பவர் ஒஸ்லோவிலை இருந்து கொண்டு களமாடியிருக்கிறார். மக்சிமலிஸ்ட், மினிமலிட்ஸ், சொப்ற் பவர் அது இது என்று ஆங்கில அகராதியில் இருக்கிற நாலு வார்த்தைகளை எடுத்து வைச்சுக் கொண்டு ஒஸ்லோவில் இருந்து ஆள் வாள் வீச, இருந்த இடத்தை விட்டு விலகாமல் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கான படையணிகளை அடுத்த கட்டத்தை நோக்கி உருத்திரகுமார் முன்னகர்த்திச் சென்றவர் என்றால் பாருங்கோவன்.
உதுக்குள்ளை உந்த சூம் போராட்டத்தில் கலந்து கொண்ட கொஞ்ச விசைப்பலகை வீரர்கள், தங்கடை மூளையில் இருக்கிற படையணிகளை ஒவ்வொரு முனைகளிலும் தரையிறக்கம் செய்து முன்னேற, இடைக்கிடை சர்வேந்திராவும், உருத்திரகுமாரனும் கட் அவுட் போட்டு, தளபதி பால்ராஜின் பாணியில் பெட்டிச் சண்டை எல்லாம் நடத்தினவையளாம்.
குடாரப்புத் தரையிறக்கம், இத்தாவில் பெட்டிச் சண்டை எல்லாம் தோற்றுப் போய் விடும் பிள்ளையள். தளபதி சூசையும், பால்ராஜும் தற்கொலை செய்கிற அளவுக்கு உவையின்ரை கள நகர்வுகள் இருந்தது என்றால் பாருங்கோவன். விசயம் தெரியாமல் உந்த சூம் கூட்டத்துக்கு போன செயற்பாட்டாளர் ஒருவர், மனம் வெறுத்துப் போய் இரண்டரை மணித்தியாலமும் வாயை மூடிக் கொண்டு இருந்து விட்டு வந்திட்டார்.
விசர் முத்திப் போய் இருக்கிற இப்படியான வேலை வெட்டியில்லாத வெங்காயங்களோடை என்னத்தைத் தான் செய்ய முடியும் பிள்ளையள்?
ஆனாலும் ஒன்று மட்டும் நான் சொல்லுவன் பிள்ளையள். கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை. கர்ணனுக்குப் பின் கொடையும் இல்லை. இது தான் இண்டைக்கு தமிழரின்ரை நிலையும் பிள்ளையள். ஏதோ எல்லோரும் புரிஞ்சு கொண்டு நடந்து கொண்டியள் என்றால் சரி. வேறை என்ன?
அடுத்த முறை நல்ல செய்திகளோடை சந்திப்பம். சரியே?