குர்திஸ்தான் மாநில அரச அனுசரணை மாநாட்டிற்கு உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு

அதிதியுரை ஆற்றினார் WTCC பிரதிநிதி!

Published on 18/03/2024
குர்திஸ்தான் மாநில அரச அனுசரணை மாநாட்டிற்கு உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு

குர்திஸ்தான் மாநில அரசின் அனுசரணையுடன் குர்திஸ்தான் தலைநகர் எர்பிலில் இடம்பெற்ற இனவழிப்பு மாநாட்டில் தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்களின் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்று இயங்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு (WTCC) விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று அவ் அமைப்பின் பிரதிநிதி அதிதியுரை ஆற்றியுள்ளார்.

கடந்த 15.03.2024 வெள்ளிக்கிழமை எர்பில் மாநகரில் அமைந்திருக்கும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில், KONCICC அமைப்பின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இம் மாநாட்டில் பங்குபற்றிய வெளிநாட்டு அதிதிகளுக்கான பயண ஏற்பாடுகள், பாதுகாப்பு, தங்குமிடம், உபசரிப்பு ஆகியவற்றுக்கு ஈராக்கில் தனியான இராணுவக் கட்டமைப்பையும், அரச கட்டமைப்பையும் கொண்ட அதியுச்ச சுயாட்சி மாநில அரசாக விளங்கும் குர்திஸ்தான் மாநில அரசு அனுசரணை வழங்கியிருந்தது.

இனவழிப்பில் இருந்து உயிர்வாழ்வு வரை (From Genocide to Life) என்ற மகுடத்தின் கீழ் இடம்பெற்ற இம் மாநாட்டில் ஆசியுரையினை குரதிஸ்தான் மாநில அதிபர் நெச்சிர்வான் பார்சானி அவர்களின் மதியுரைஞர் கொறான் அவர்கள் ஆற்றினார்.

தொடர்ந்து குர்திஸ்தான், மொறக்கோ, கொரியா, லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இனவழிப்பிற்கு எதிரான அமைப்புக்களின் பிரதிநிதிகளோடு, தமிழீழத்தின் சார்ப்பில் பிரித்தானியாவில் இருந்து பங்கேற்ற உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக குழுவின் (WTCC) பிரதிநிதியான கலாநிதி A.R.சிறீஸ்கந்த ராஜா அதிதியுரை ஆற்றினார் (guest speaker).

இதன்போது குர்திஸ்தானிலும், தமிழீழத்திலும் நிகழ்ந்த இனப்படுகொலைகளை உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி ஒப்பிட்டுப் பேசியதோடு, ஏலவே நடந்தேறிய இனவழிப்புகளுக்கு நீதி தேடுவதோடு மட்டும் நின்றுவிடாது, இரு தேசங்களிலும் மீண்டும் இனவழிப்புகள் நிகழாதிருக்க வேண்டுமாயின், பன்னாட்டு உத்தரவாதத்துடன் கூடிய வலுவான பாதுகாப்புக் கட்டமைப்புகள் தமிழீழத்திலும், குர்திஸ்தானிலும் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

குர்திஸ்தான் தேசம் மீண்டெழுவதற்கு இனவழிப்பில் இருந்து உயிர்தப்பிய குர்திஸ் தலைவர்கள் வழிகாட்டியது போன்று, தமிழீழ தேசமும் மீண்டெழுவதற்கு முள்ளிவாய்க்காலில் இனவழிப்பில் இருந்து உயிர்தப்பிய மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்கள் வழிகாட்டியாக விளங்குவதாகவும் தனது உரையில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி தெரிவித்தார்.

மாநாட்டைத் தொடர்ந்து வந்த இரண்டு நாட்களும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி உட்பட அனைத்து வெளிநாட்டு அதிதிகளும் கடந்த காலங்களில் குர்திஸ்தானில் சதாம் உசேனின் படைகளால் இனவழிப்பு அரங்கேற்றப்பட்ட பகுதிகள், சித்திரவதைக் கூடங்கள், மனிதப் புதைகுழிகள், நினைவுத் தூபிகள், மடிந்த குர்திஸ் பொதுமக்கள் மற்றும் பெஷ்மேகா (Peshmerga) போராளிகளின் கல்லறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதிலும் குறிப்பாக சதாம் உசேனின் படைகளால் இரசாயனக் குண்டுகள் வீசிக் கொத்துக் கொத்தாக குர்திஸ் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்ட ஹலாப்ஜா பகுதியில் உள்ள கல்லறைகள் மற்றும் மனிதப் புதைகுழிகளில், மேற்குலக இராஜதந்திரிகள் மலர்வளையம் வைத்து இராணுவ மரியாதையுடன் வணக்கம் செலுத்திய 16.03.2024 சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு அதே இடத்தில் மலர்வளையம் வைத்து வணக்கம் செலுத்த உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிதி உட்பட அனைத்து வெளிநாட்டு அதிதிகளும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.