‘காசி அண்ணன் பாட்டைத் தேனிசையில் கேட்டேன்!’

- சேரமான்

Published on 30/04/2026
‘காசி அண்ணன் பாட்டைத் தேனிசையில் கேட்டேன்!’

‘காசி அண்ணன் பாட்டைத் தேனிசையில் கேட்டேன்!’ - சேரமான்

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா காலம் ஆகி விட்டார் என்ற செய்தி நேற்றுக் காலை வந்தடைந்த போது, உடனே என் மனதில் அலைமோதியது புரட்சிப் பாவலர் மாமனிதர் காசி ஆனந்தன் அவர்களின் வரிகளில் அவர் பாடிய வீரவரிகள் தான்.

மாமனிதர் காசி ஆனந்தன் ஐயா தந்தை செல்வா, பாவேந்தர் பாரதிதாசன் போன்றோரின் காலத்திலேயே புகழபெற்ற ஈழத்தின் புரட்சிப் பாவலர்.

காசி ஆனந்தன் ஐயா எழுதும் ஒவ்வொரு வரிகளிலும் ஆழமான அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.

அவற்றுக்கு இசை அமைப்பதும், குரல் கொடுப்பதும் அவ்வளவு இலகுவான காரியம் அல்ல.

அதை மிகவும் நேர்த்தியாகச் செய்து ஈழத்தமிழர்களின் இதயங்களில் நிலைபெற்றவர் தேனிசை செல்லப்பா.

‘உலகத் தமிழினமே எண்ணிப் பார்’, ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’, ‘மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை’, ‘மறவர் படை தான் தமிழ்ப் படை’ இப்படி மாமனிதர் காசி ஆனந்தன் ஐயா எழுதிய எண்ணிலடங்காத பாடல்களுக்கு இசை அமைத்துக் குரல் கொடுத்தவர் தேனிசை செல்லப்பா.

அதனால் தான் ‘மூச்சிழுக்கும் நேரம் எல்லாம், உன் முகமே ஞாபகம்’ என்ற பாடலில் ‘காசி அண்ணன் பாட்டைத் தேனிசையில் கேட்டேன்’ என்று கவிஞர் அறிவுமதி எழுதியிருந்தார்.

ஏன் தேனிசை செல்லப்பாவிற்குப் ‘பாசறைப் பாணர்’ என்ற பட்டத்தைக் கொடுத்தது கூட காசி ஆனந்தன் ஐயா தான்.

மகா பாரதத்தில் கண்ணபிரானின் எண்ணப்படி குருசேத்திர களத்தை அர்ச்சுன் வெற்றி கொண்டது போல், புரட்சிப் பாவலர் காசி ஆனந்தன் ஐயாவின் எண்ணத்தில் உருவான பாடல் வரிகளின் மூலம் ஈழத் தமிழர்களில் இதயங்களை வெற்றி கொண்டவர் தேனிசை செல்லப்பா.

இன்று பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா உயிரோடு இல்லை.

ஆனாலும் புரட்சிப் பாவலர் மாமனிதர் காசி ஆனந்தன் ஐயாவின் வரிகளில் அவர் இசையமைத்துப் பாடிய ஒவ்வொரு பாடல்களின் மூலம் பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா உயிர் வாழ்ந்து கொண்டே இருப்பார்.